அதிமுகவுடன் நேரடியாக மோதும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி!
திமுக கூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, இதில் தான் போட்டியிடும் 3 இடங்களிலும் அதிமுகவுடன் நேரடியாக கொமதேக மோதுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில், ஒருவாறாகத் தோழமைக் கட்சிகள் திமுகவுடன் ஒப்பந்தம் செய்தன. இதில் காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், இடதுசாரிகள், மதிமுக, விசிக ஆகியவை தலா 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
கடந்த சில நாட்களாக நடைபெற்ற பேச்சில் இழுபறி நீடித்த நிலையில் மார்ச் 9-ம் தேதி இரவு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சந்தித்தார். அப்போது கொமதேகவுக்கு 3 தொகுதிகளை ஒதுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து கொமதேக 3, ஐயூஎம்எல் 3, மமக 2, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என மொத்தம் 54 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் நிற்கின்றன.
இந்நிலையில் கொமதேகவுக்கு பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தான் போட்டியிடும் 3 இடங்களிலும் அதிமுகவுடன் நேரடியாக கொமதேக மோதுகிறது.