பாஜக ஆட்சிக்கு வந்தால் உத்தரபிரதேச நிலை தான் தமிழ்நாட்டுக்கும்! – திருமாவளவன்

இன்று மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி மகளிர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்,  திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மகளிர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது மட்டுமின்றி அவர்களது உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுகின்றன.

மனு நீதியின் அடிப்படையில் ஆட்சி செய்ய விரும்பும் சனாதன சக்திகள் மகளிரை போகப் பொருளாகவும், எவ்வித உரிமைகளும் இல்லாத அடிமைகளாகவுமே கருதுகிறார்கள். அதனால்தான் அவர்கள் மீதான வன்கொடுமைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மகளிர் உரிமையைப் பாதுகாக்க சனாதன சக்திகளை எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று அனைத்துலக மகளிர் நாளில் சூளுரை ஏற்போம்.

இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிருக்கான ஒதுக்கீடுகள் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கின்றன. மகளிருக்கான ஊட்டச்சத்து திட்டங்களுக்கான நிதியும், மகளிரது பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடும் பெருமளவில் குறைக்கப்பட்டு இருக்கின்றன.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மிக அதிகமான இன்னல்களைப் பெண்களே எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களது நிலையை மேம்படுத்துவதற்கென்று சிறப்புத் திட்டம் எதுவும் பாஜக அரசால் செயல்படுத்தப்படவில்லை. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியும் பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளதால் அதை வாழ்வாதாரமாகக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பெண்கள் இப்போது கைவிடப்பட்ட நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

2021 ஆம் ஆண்டுக்கான மகளிர் நாள் கருப்பொருளாக ‘ தலைமைத்துவத்தில் பெண்கள்’ என்பதை ஐ.நா அவை அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு தரும் சட்டத்தை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்து 2014ஆம் ஆண்டில் ஆட்சியை பிடித்த நரேந்திர மோடி ஏழு ஆண்டுகள் ஆகியும் அதற்கான எந்தவொரு முனைப்பையும் காட்டவில்லை. அதுமட்டுமின்றி உயர்நீதித் துறைகளில் மகளிரின் பங்கேற்பு மிக மிக சொற்பமாக இருக்கிறது. அதைத் தீர்த்து வைப்பதற்கு எந்தவொரு முயற்சியையும் பாஜக அரசு எடுக்கவில்லை.

தேசிய குற்ற ஆவண மைய அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களைப் பார்த்தால் பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் மீதான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. அதிலும் குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்கள் நடமாட முடியாத நிலை உருவாகியுள்ளது. ‘லவ் ஜிஹாத்’ என்ற போலியான குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண்கள் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றன. இதற்காக ‘ ரோமியோ ஸ்குவாட்’ என்ற கொலைக் கும்பலை உத்தரப்பிரதேச பாஜக அரசு ஊக்குவித்து வருவது பாஜகவின் மகளிர் விரோத போக்குக்கு ஒரு சான்றாகும்.

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் படுகொலை செய்யப்படுவது பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அதிகரித்து வருகிறது. மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் பெண்களுடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்களது கல்வி உரிமையும் பறிபோய்க்கொண்டிருக்கிறது. பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்கான உதவித்தொகைத் திட்டம் முற்றாக கைவிடப்பட்டுள்ளது.

இப்படி சனாதன வாதிகள் மனுநூலில் சொன்னதைப் பின்பற்றி மகளிரை அடக்கி ஒடுக்கி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் அவர்கள் காலூன்றிட அனுமதித்தால் உத்தப் ரபிரதேசத்தில் இப்போது எப்படி பெண்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்களோ அது தமிழகத்திலும் நடக்கும்.

மகளிர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் சனாதன சக்திகள் வலிமைபெறாமல் தடுப்பது அவசியமாகும். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சனாதன பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடித்து மகளிர் உரிமைகளைப் பாதுகாப்போம் என அனைத்துலக மகளிர் நாளில் உறுதி ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *