அதிமுக – தேமுதிக தொகுதி உடன்பாடு எப்போது?
அதிமுக- தேமுதிக இடையேயான தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்து வருகிறது. பாமக, பாஜகவுக்கு இளைத்த கட்சியல்ல தேமுதிக. மாநிலம் முழுவதும் எங்களுக்கு வாக்குகள் உள்ளன. அதனால் அவர்களைவிடக் கூடுதலாக தொகுதிகள் வழங்க வேண்டும் என தேமுதிக தரப்பில் பேசப்பட்டது.
ராஜ்ய சபா எம்.பி. ஒன்றும், 10 தொகுதிகள் வேண்டும் என்றும் தேமுதிக பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. இதனால் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. இந்நிலையில் இரு கட்சிகளும் இறங்கி வந்ததை அடுத்துப் பேச்சுவார்த்தை நேற்றிரவு மீண்டும் தொடர்ந்தது. நேற்று இரவு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் அரை மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.
அதன் பின்னர் ஓபிஎஸ் இல்லத்திற்குச் சென்ற எல்.கே.சுதீஷ், அவரையும் சந்தித்துப் பேசினார். 10 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சுதீஷ் கிளம்பிச் சென்றார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. தேமுதிக தரப்பில் 20 தொகுதிகளுக்குக் குறையாமல் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் 15 அல்லது கூடுதலாக ஒன்றிரண்டு தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ளலாம் எனத் தெரிகிறது.
இன்று தேமுதிக நேர்காணல் முடிந்தவுடன் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் உடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்துப் பேசப்பட்டு உடன்பாட்டுக்கு வருவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.
அதன் பின்னர் எந்தெந்தத் தொகுதிகள் கேட்டு வாங்குவது, எந்தத் தொகுதியைப் பெற உறுதியாக இருப்பது போன்ற விஷயங்களும் அலசப்படும். கூட்டத்தின் முடிவுக்குப் பின் அல்லது இன்றிரவு அதிமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.