பலவீனமடைந்துள்ள காங்கிரஸ் கட்சியை பலபடுத்த வேண்டும் – காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கோரிக்கை!

வயதாகும் போது கட்சி பலவீனம் அடைவதை பார்க்க விரும்பவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஜம்முவில் நடந்த ‘சாந்தி சம்மேளன்’ என்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் பேசியதாவது: ”காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது என்பது உண்மை. இதனால், தான் நாம் இங்கு கூடி உள்ளோம். கடந்த காலங்களிலும் நாம் ஒன்று கூடி உள்ளோம். நாம் கட்சியை பலப்படுத்த வேண்டும். குலாம் நபி ஆசாத்தின் பணியை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். விமானத்தை அனுபவம் வாய்ந்தவரால் மட்டுமே ஓட்ட முடியும். அதில், இன்ஜினில் ஏற்படும் கோளாறை அவருடன் பயணிக்கும் பொறியாளர் மட்டுமே சரி செய்ய முடியும். குலாம் நபி ஆசாத் அனுபவம் வாய்ந்தவர். பொறியாளர் ஆவார்.
அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் உண்மை நிலையை தெரிந்த தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். பார்லிமென்ட் பணியில் இருந்து ஓய்வு பெற்றது அறிந்து வருத்தம் அடைந்தோம். பார்லிமென்டில் இருந்து அவர் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. அவரது அனுபவத்தை ஏன் காங்கிரஸ் பயன்படுத்தவில்லை என்பது குறித்து தெரியவில்லை.” இவ்வாறு அவர் பேசினார்.குலாம் நபி ஆசாத் பேசுகையில், கடந்த 5- 6 ஆண்டுகளில் பார்லிமென்டில் காஷ்மீர் விவகாரம், வேலைவாய்ப்பின்மை குறித்து அதிகம் பேசியுள்ளோம். ஜம்மு அல்லது காஷ்மீர் அல்லது லடாக் என எந்த பகுதியிலும் வசிக்கும் அனைத்து மக்கள், மதம் ஆகியவற்றை மதிக்கிறோம். அனைவரையும் சமமாக நடத்துகிறோம். இது தான் நமது பலம். இது தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆனந்த் சர்மா பேசுகையில், 1950க்கு பிறகு, ராஜ்யசபாவில் காஷ்மீரை சேர்ந்த பிரதிநிதி யாரும் இல்லை என்ற சூழ்நிலை வந்தது இல்லை. இந்த தவறு சரி செய்ய வேண்டும். கடந்த பல ஆண்டுகளில் காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது. கட்சி பலமடைய வேண்டும் எனக்கருதியே நாங்கள் குரல் கொடுக்கிறோம். அனைத்து மட்டத்திலும் கட்சி பலப்பட வேண்டும். புதிய தலைமுறையுடன் கட்சி தொடர்பு கொள்ள வேண்டும். காங்கிரசின் நல்ல காலத்தை பார்த்து உள்ளோம். நாம் வயதாகும் போது கட்சி பலவீனம் அடைவதை பார்க்க விரும்பவில்லை.” இவ்வாறு அவர் பேசினார்.