அரசு விழாவாகக் கொண்டாடப்படும் பிறந்தநாள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை வெகு விமர்சையாகக் கொண்டாட அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதாவின் சிலைக்கு கட்சி ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்க உள்ளனர்.

அதன்பின்னர், அம்மா நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா சிறப்பு மலரை அவர்கள் இருவரும் வெளியிட உள்ளனர்.
மேலும், லேடி வெலிங்டன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்துவதுடன், ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவையும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.

அதிமுகவினர் தங்களது இல்லங்களில் தீபம் ஏற்றி அதிமுக-வை காப்பேன் என உறுதிமொழியேற்கும்படி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் பிறந்த நாள், அரசு விழாவாகவும், பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாகவும் முதல் முறையாகக் கொண்டாடப்படுகின்றது.