காமராஜரையே தோற்கடித்ததேன் தமிழகம்?
பள்ளிகளை அமைத்து கல்விக் கண் திறந்தவர், கர்ம வீரர், மதிய உணவுத் திட்டம் வாயிலாக மாணவர்களைப் பள்ளிக்கு கொண்டு வந்தவர், அணைகள் பல கட்டியவர், தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர், ஊழலற்றவர், எளிமையானவர், பெருந்தலைவர் எனப் பலப் பெருமைகளுக்குரியவர் காமராஜர்.
தமிழகத்தை அவர் ஆட்சி செய்த 9 ஆண்டு காலத்தை பொற்காலம் என்று போற்றுகிறார்கள். அப்படிப்பட்டவரையே 1967ல் தோற்கடித்துவிட்டார்கள் வாக்காளர்கள் என்ற அவச்சொல் தமிழக மக்கள் மீது இப்போதும் அரசியல் களத்தில் முன்வைக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற 1952ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், சிறிய கட்சிகள்-சுயேச்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவை காங்கிரசுக்கு சாதகமாக்கி, ஆட்சி அமைத்து முதலமைச்சரானார் ராஜாஜி. அவரது ஆட்சியில் மதுவிலக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
அதனால், ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுசெய்ய, அரசு செலவில் நடைபெற்ற பள்ளிகள் பல மூடப்பட்டன. பள்ளிகளில் பாதி நேரம் படிப்பு-பாதி நேரம் குலத்தொழில் என குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதனை எதிர்த்து பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியது. ராஜாஜி ஆட்சிக்கு எதிர்ப்பு வலுக்கவே அவர் பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு முதலமைச்சராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பெரியாரின் ஆதரவும் இருந்தது.
1954ல் முதல்வரான காமராஜர் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லை. அதனால் அன்றைய வடாற்காடு மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டார். கம்யூனிஸ்ட் வேட்பாளர் எதிர்த்து நின்றார். தி.க., தி.மு.க. ஆகியவை காங்கிரஸ் வேட்பாளரான காமராஜரை ஆதரித்தன. அவர் வெற்றிபெற்றார்.
தமிழகத்திற்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்தார் காமராஜர். மத்தியில் ஆட்சி செய்த பிரதமர் நேரு தலைமையிலான அரசிடம், வடமாநிலங்கள் அளவுக்கு தென்மாநிலங்களில் வளர்ச்சி இல்லை என்பதை எதிர்க்கட்சிகள் முன்வைத்து பிரச்சாரம் செய்வதை எடுத்துரைத்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கேற்ற கட்டமைப்புகளை உருவாக்கினார்.
1963ல் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் பதவி விலகி, அடுத்த தலைமுறைக்கு வழி விடவேண்டும் என்கிற ‘கே ப்ளான்’ காமராஜரால் முன்மொழியப்பட்டது. (கே ப்ளான்=காமராஜர் ப்ளான்). அதற்கு எடுத்துக்காட்டாக, அவரும் தன் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். தமிழகத்தின் முதல்வராக பக்தவத்சலம் பதவியேற்றார்.
இந்திய அளவிலும் மாநில அளவிலும் அரசியல் சூழல்கள் மாற்றம் பெற்றன. 1964ல் நேரு மரணத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியிலும் தள்ளாட்டம் ஏற்பட்டது. பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அரசு, இந்தி மொழியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவதில் தீவிரம் காட்டியது. தமிழகத்தில் மொழிப்போர் தொடங்கியது. மாணவர்களும் இளைஞர்களும் களம் கண்டனர்.
எதிர்க்கட்சியான தி.மு.கழகத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பக்தவத்சலம் அரசின் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. துணை ராணுவமும் வரவழைக்கப்ட்டது. இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாய்மொழி காப்பதற்காக தீக்குளித்து உயிர் விட்டனர் தீரமிக்க இளைஞர்கள்.
மொழியுணர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன், அரிசி விலை உயர்வு, உணவு தானியப் பஞ்சம் இவற்றால் ஏழை மக்கள் துன்பப்பட்டனர். சுதந்திர இந்தியாவில் சோற்றுப் பஞ்சம் ஏற்பட்டது. சோறு இல்லாவிட்டால் சப்பாத்தி சாப்பிடுங்கள்.. எலிக்கறி சாப்பிடுங்கள் என்று கேலி பேசிய காங்கிரஸ் தலைவர்களும் இருந்தனர். இவையெல்லாம் 1967ல் நடந்த பொதுத் தேர்தலில் எதிரொலித்தன.
பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கும் கிங் மேக்கராக இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருந்த காமராஜர், அந்தத் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தி.மு.க.வைச் சேர்ந்த இளைஞர் சீனிவாசனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
முதலமைச்சர் பக்தவத்சலம் உள்பட அமைச்சர்கள் பலரும் தோல்வியடைந்தனர். எளிமைக்கு அடையாளமானவரான கக்கன், காவல்துறைக்கான அமைச்சராக இருந்தார். மொழிப்போரில் மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் அவரையும் தோல்வி அடையச் செய்தது. பூவராகன் என்ற அமைச்சர் மட்டுமே அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
தேர்தல் களம் என்பது தனிமனித செல்வாக்கையும் மீறி, பொது எண்ண ஓட்டத்தின் தாக்கம் அதிகம் நிறைந்தது. காமராஜர் மீது தமிழகத்திற்கு கட்சி கடந்த மரியாதை எப்போதும் உண்டு. அவருக்குப் பிறகு முதல்வர் மற்றும் அமைச்சர்களாக இருந்தவர்களின் அணுகுமுறையும், மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசின் இந்தி மொழி வெறியுமே காமராஜரையும் சேர்த்து தோற்கடிக்க அடிப்படைக் காரணம். மக்களின் பசித் துயரும், ஆட்சிமாற்றம் தேவை என்ற எண்ணமும் தேர்தலில் எதிர்ப்பலையை அதிகமாக்கியது. அந்த சுனாமியில் ஒட்டுமொத்த காங்கிரசும் தமிழகத்தில் தோல்வியடைந்தது.
தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு, நாகர்கோவிலில் 1969ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே தமிழக மக்கள் பெருந்தலைவர் காமராஜரை வெற்றி பெறச் செய்து, டெல்லி நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்ற வரலாற்று உண்மையை யாரும் உரக்கச் சொல்வதில்லை. தனிப்பட்ட காமராஜரை தமிழகம் தோற்கடிக்கவில்லை என்பதற்கு அந்த இடைத்தேர்தல் வெற்றியும், அதன்பிறகு 1971 பொதுத்தேர்தலிலும் அதே தொகுதியில் காமராஜரையே வெற்றி பெறச் செய்ததும் சாட்சியமாக இருக்கின்றன.