ஆல் ரவுண்டர்களில் விட்ட இடத்தைப் பிடித்த ஜடேஜா
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன், இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட் உள்ளிட்டோர் முதல் ஐந்து இடங்களில் மாற்றமில்லாமல் தொடர்கின்றனர்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் பாட் கம்மின்ஸ், 2-வது இடத்தில் அஸ்வின், 3-வது இடத்தில் நியூசிலாந்தின் டிம் சவுதியும் நீடிக்கிறார்கள்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர்களின் தரவரிசைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் முதல் இடத்தில் இருந்தார். ஆனால், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடாததால் 28 புள்ளிகளை இழந்து மொத்தம் 384 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்துக்குச் சென்றுள்ளார்.
அதன் காரணமாக இரண்டாவது இடத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடன் மறுபடியும் முதலிடத்தை பிடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் இடத்தை ஜடேஜா பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.