100 சதவீத தடுப்பூசி செலுத்திய தமிழகத்தின் முதல் கிராமம்
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதற்குத் தடுப்பூசி ஒன்று தான் தீர்வு என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து, 18 வயதை மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை அடைய அதிகாரிகளும் முயற்சி செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டியுள்ளது.
இது தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் பூண்டி கே.கலைவாணனின் தீவிர முயிற்சியினால் கொரடாச்சேரி ஒன்றியத்திலுள்ள கருணாநிதியை தமிழகத்திற்குத் தந்த அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் எனும் கிராமம் முன்மாதிரி கிராமமாகத் தேர்வு செய்யப்பட்டது.
அக்கிராமத்தில் முழுவதுமாக 100 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே முழுவதுமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட கிராமம் என்ற நற்பெயரை காட்டூர் கிராமம் பெற்றிருக்கிறது.
இந்தியாவிலேயே காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டம், வேயாண் எனும் கிராமத்தில் முழுவதுமாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் இருக்கிற பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் திருவாரூர் மாவட்டம் காட்டூர் எனும் கிராமத்தில் முழுவதுமாக 100 சதவீதம் அளவுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இக்கிராமத்தில் மொத்தம் 3,332 பேர் வசிக்கின்றனர். அவர்களில் 18 வயதுக்கும் கீழே 998 பேர், அதாவது, கர்ப்பிணிகள் தடுப்பூசிகள் செலுத்த முடியாதவர்கள், மருத்துவ ரீதியாகத் தடுப்பூசி போடக்கூடாதவர்கள் தவிர 2,334 பேர் ஒட்டுமொத்தமாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.