அடேங்கப்பா!! 1000 ரூபாய்க்கு துணி வாங்கினால் இதெல்லாம் பரிசா கிடைக்குமா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருவாரூரைச் சேர்ந்த துணிக்கடை ஒன்றில் ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கினால், ஆடு இலவசம் என்ற அதிரடி சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள் வாங்க மக்கள் கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிவது வழக்கம். எனவே தான் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் கடைக்காரர்கள் விதவிதமான ஆடை ரகங்களுடன், கலக்கலக்கான சலுகைகளையும் அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

சில கடைகளில் விற்பனையை அதிகரிப்பதற்காக குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவதும் உண்டு. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சலுகைகளோடு, பல அதிரடி பரிசுகளையும் ஐவுளிக்கடை உரிமையாளர்கள் அறிவித்து வருகின்றனர்.
அப்படி திருவாரூரில் அமைந்துள்ள நியூ சாரதாஸ் என்ற துணிக்கடையில் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது குலுக்கல் பரிசு போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 ரூபாய்க்கு மேல் துணி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கூப்பன் வழங்கப்படும், அவை அனைத்தும் சேகரிக்கப்பட்டு தீபாவளியான நவம்பர் 4ம் தேதி இரவு 10 மணிக்கு குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள். இந்த குலுக்கலில் முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயமும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பரிசாக ஆடு ஒன்றும், ஐந்தாவது பரிசாக 25 நபர்களுக்கு பட்டுப்புடவையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கினால் ஆடு பரிசாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்களும் விதவிதமாக மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.