முதல் நாள் வேலை… முற்றிலும் தவிர்க்க வேண்டியவை!

வேலை கிடைத்த பிறகு நிறுவனத்துக்கு செல்லும் முதல் நாள், ஆவலும், பதற்றமும் ஒவ்வொருவருக்குள்ளும் நிறைந்திருக்கும். அப்போது, நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், நம் மீதான நல்லெண்ணத்தையும், தவறான பார்வையையும் உருவாக்கும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. அதனால், நம் திறமையை நிரூபிக்கும் வரை அங்கு இருப்பவர்களிடம் மிகவும் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் முதல் நாள் வேலை செல்பவர்கள் தவிர்க்க வேண்டிய வார்த்தைகள் என்ன என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மன்னிக்கவும்.. தாமதமாக வந்துவிட்டேன்

வேலைக்கு செல்பவர்கள் ஒருபோதும் தாமதமாக செல்லக்கூடாது. அதுவும், முதல் நாள் வேலைக்கு செல்பவர்கள் செய்யக்கூடாத விஷயங்களில் இது மிக மிக முக்கியம். முதல் நாள் வேலைக்கு செல்லும் நாளன்று, காலையில் விரைவாக எழுந்து, குளித்து, அழகாக தங்களை தயார் செய்து கொண்டு, எந்த படபடப்பும் இல்லாமல் பொறுமையாக பயணம் செய்து நிறுவனத்தை அடையவேண்டும். இது உங்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். முதல்நாள் தாமதமாக செல்பவர்கள் மீது நல்ல எண்ணம் நிச்சயமாக வராது.

வரவேற்பாளரை புகழாதீர்கள்

முதல் நாள் வேலைக்கு சென்றபிறகு, நிறுவன நுழைவு வாயிலில் இருக்கும் வரவேற்பாளரை உடல் ரீதியாக புகழாதீர்கள். பாலியல் தொடர்பான வார்த்தை பிரயோகங்கள் குறித்து பிரச்சனை எழும் ஏதாவதொரு நாளில், உங்களை அழைத்து விசாரிக்கவும் வாய்ப்பு உள்ளது. அது உங்களின் மீதான நன்மதிப்பை கெடுத்துவிடும் என்பதால் அதனை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். ஒருவேளை நீங்கள் அவர்களை புகழ்வதற்காக கூட சில வார்த்தைகளை ஜாலியாக கூறியிருக்கலாம். ஆனால், பழகுவதற்கு முன்பு கூறும் வார்த்தைகள் தவறான எண்ணங்களை மட்டுமே ஏற்படுத்தும்.

என்னுடைய கடைசி வேலையில்…!

புதிதாக வேலைக்கு சேர்ந்த பிறகு நீங்கள் சந்திக்கும் சில சூழல்களுக்கு, முந்தைய நிறுவனத்தில் கையாண்ட யுக்தி சிறப்பானதாக இருக்கும் என உங்களுக்கு தோன்றும். ஆனால், அதனை உங்கள் தலைமையிடம் தெரிவித்தால், கிடைக்கும் ரெஸ்பான்ஸ் முகம் சுளிக்கும் வகையில் இருக்கவும் வாய்ப்புள்ளது. புதிய சூழலை, உங்களின் முந்தைய நிறுவனத்தின் சூழலுடன் ஒப்பிட்டு ஒருபோதும் பேசாதீர்கள். அதற்கு பதிலாக, புதிய நிறுவனத்தில் எதிர்கொள்ளும் சூழல்களுக்கு மாணவனாக இருந்து கற்றுக்கொள்ளுங்கள். இந்த செயல் உங்களின் தலைமைக்கும் பிடிக்கும். உங்கள் பணியில் அடுத்த நிலைக்கு செல்வதற்கு படிகட்டாவும் இருக்கும்.

சமூகவலைதளங்கள் வேண்டாம்

முதல் நாள் வேலைக்கு சென்றவுடன், அங்கிருக்கும் நடைமுறைகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். சக பணியாளர்கள் மற்றும் உங்களின் தலைமை நீங்கள் கற்றுகொள்வதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை முதல் நாளில் இருந்தே நோட்டமிடுவார்கள். அந்த சமயத்தில், முதல் நாளில் வேலை இல்லை என்பதற்காக சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடக்கூடாது. இடைவேளை நேரத்தில் சமூகவலைதளங்களை பார்த்துக்கொள்ளுங்கள். 8 மணி நேரத்தில் முடிந்தளவுக்கு கம்பெனியின் நடைமுறை மற்றும் பணிக்கான செயல்முறைகளை கற்றுக்கொள்வது உங்கள் மீதான நன்மதிப்பை உயர்த்தும்.

தொலைபேசி அழைப்புகள்

முதல் நாள் வேலையில் இருக்கும்போது ஏதேனும் அவசர அழைப்புகள் வந்தால், எங்கு சென்று தொலைபேசி பேசலாம்? என மற்றவரிடம் கேட்காதீர்கள். நீங்கள் யாருடனாவது அவசரமாக உரையாட வேண்டியிருந்தால், நிறுவனத்துக்கு வெளியே சென்று உரையாடிவிட்டு வாருங்கள். இது குறித்து மற்றவரிடம் கேட்கும்போது, உங்களை ரகசியம் பேணுபவர் என எண்ணுவதற்கு வாய்ப்பு உள்ளது. வெளிப்படையாக நீங்கள் பேசுபவரென்றாலும், இதுபோன்ற கேள்விகளை சக பணியாளர்களிடம் தவிர்த்துவிடுங்கள்.

கிசுகிசு பேச வேண்டாம்

வேலையில் இருக்கும் முதல் நாளில் அங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் உங்களுக்கு புதிதாக இருக்கும். சக பணியாளர்களின் உறவு என்னவென்பது உங்களுக்கு தெரியாது என்பதால், அவர்கள் உரையாடலில் தேவையில்லாமல் கலந்து கொள்ளாதீர்கள். மேலும், அவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக, மற்றவர் கூறிய விஷயங்களை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ளதீர்கள். கம்பெனி முழுவதும் உங்களைப் பற்றி தவறான எண்ணம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனை ஒருபோதும் செய்யாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *