தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை எவ்வளவு?… ஒன்றிய அமைச்சர் விளக்கம்!

தமிழகத்திற்கு 2493 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில் உள்ளதாக ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கி விட்டதா எனவும் அவ்வாறெனில் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை குறித்த விவரங்களை தருமாறு மத்திய நிதியமைச்சருக்கு மதுரை தொகுதியின் மக்களவை எம்பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பல்வேறு மாநிலங்களுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.35,266 கோடி நிலுவைத்தொகை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவற்றில் தமிழகத்திற்கான பங்காக ரூ.2493 கோடி ரூபாய் ஜூன் மாத ஜிஎஸ்டி இழப்பீடாக நிலுவைத் தொகை இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டிற்கான காலகட்டத்தை நீடிக்குமாறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளதா என சு வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய இணை அமைச்சர் ஜூன் மாதத்திற்கு பிறகும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இடப்பட்டு நீட்டிக்குமாறு சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளது எனவும் இந்திய அரசியலமைப்பு நூறாவது திருத்தச் சட்டத்தின் படி ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பை ஈடு கட்டும் விதமாக ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வழிவகை செய்ய ப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.