இந்தியாவின் ஜனநாயக பரிசோதனை..!
உலக பத்திரிக்கை சுதந்திர குறியீடு ஆண்டுதோறும் வெளியாகி வருகிறது. இதில் இந்தியா சுமார் 150 வது இடத்தில் உள்ளது. இந்த தகவல் வெளியான போது இந்தியாவின் நற்பெயரை கெடுப்பதற்காக சில நாடுகள் மற்றும் அமைப்புகள் இந்தியாவிற்கு குறைந்த மதிப்பெண்கள் அளித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், தவறான கணக்கீடு முறைகளை RSF நிறுவனம் பயன்படுத்தியதால் இந்தியா தரவரிசை பட்டியலில் 150 வது இடத்திற்கு சென்றது சிலர் தெரிவித்தனர்.
இதே போல், உலக சுதந்திர குறியீட்டில் இந்தியா 66 மதிப்பெண்களுடன் ”ஓரளவு சுதந்திரம்” (Partly Free) உள்ள நாடு என்று தனது அறிக்கையில் ஃப்ரீடம் ஹவுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலே சொல்லப்பட்ட அனைத்து காரணங்களும் விளக்கங்களும் அப்போது தரப்பட்டது.
ஆரம்பத்தில் இவ்விரண்டிலும் இந்தியா நல்ல நிலையில் இருந்த நாடு தான். பத்திரிக்கை சுதந்திரத்தில் 80 வது நாடாகவும், சுதந்திர குறியீட்டில் 77 மதிப்பெண்களுடன் “சுதந்திர நாடு” (Free) என்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. ஆனால் இன்றோ இந்த நிலை. இதற்கு காரணம் ஒன்றிய அரசின் அதிகார போக்கு தான்.
பத்திரிக்கையாளர்களுக்கு தொல்லை தருவது, அவர்களை கைது செய்வதில் தொடங்கி சில நேரங்களில் அவர்களை கொலை செய்வது வரை செல்கிறது (கவுரி லங்கேஷ், கல்புர்கி).
மேலும் ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, சிபிஐ முதல் நீதித்துறை வரை தனக்கு ஏவல் வேலை செய்யும் போக்கை கடைபிடித்து வருகிறது. ஆனால் ஜி7 மாநாட்டில் இதற்கு நேர்மாறாக ஜனநாயகம் பற்றியும் கருத்து சுதந்திரம் பற்றியும் பிரதமர் மோடி இந்தியா தான் ஜனநாயகத்தின் தாய் என்று வானளாவ பேசுகிறார்.
ஆனால் இதே மோடி குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் போது தீ வைப்பவர்களை, கலவரத்தில் ஈடுபடுபவர்களை அவர்களது ஆடைகளை வைத்து அடையாளம் காணலாம் என்று இஸ்லாமியர்களை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். உத்திர பிரதேச தேர்தலில் பா.ஜ.கவின் சார்பாக முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட யோகி ஆதித்யநாத் 80% மக்களுக்கு 20% மக்களுக்குமான தேர்தல் என்று பிரகடனம் செய்தார்.
இன்றைய அரசியலை தினசரி கவனிப்பவர்கள் மட்டுமல்லாது அரசியலை உற்று நோக்காதவர்கள் கூட இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் பற்றி அறிந்தவர்களாக இருக்கின்றனர். ஒரு புறம் தீவிரமாக இந்த வெறுப்பு பிரச்சாரத்தை தவறு என்று கருதுபவர்கள் இருந்தாலும், ஏனையோர் மனதில் பாஜகவின் பிரசாரங்கள் மற்றும் நடவடிக்கைகள் சரி தான் என்பது போன்ற எண்ணம் எழுவதை யாராலும் மறுக்க முடியாது. இது தமிழ்நாட்டை விட வட மாநிலங்களில் இன்னும் அதிகமாக உணர முடிகிறது.
இது போன்ற வெறுப்பு பிரச்சாரங்கள் பாஜகவின் போக்கையும் எதிர்த்து பேசும் ஊடகவியலாளர்களின் சமூக வலைதளங்களை முடக்குவது, அவர்களை பணியில் இருந்து நீக்க செய்தி நிறுவனங்களுக்கு அழுத்தம் தருவது, அவர்களை கைது செய்வது என்று அதிகரித்துக்கொண்டே போகும் பாஜகவின் நடவடிக்கைகளின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். எதிர் கருத்துகள் எழவே கூடாது.
அரசியலில் கூட தனக்கு எதிராக கட்சிகளே இருக்க கூடாது என்று எண்ணும் கட்சி, ஊடகத்திலும் அதே போல் தனக்கு எதிராக கேள்வி கேட்பவர்களே இருக்க கூடாது என்று நினைக்கிறது. இதன் இன்னொரு பரிணாமமாக தனது மதம் இல்லாமல் வேறு மதம் பின்பற்றும் இஸ்லாமியர்களே இருக்க கூடாது என்று கருதுகிறது.
அதை பகிரங்கமாக தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக பாஜக வெளியிடவில்லை என்றாலும் அனைவரும் அறிந்த உண்மையாக இருக்கிறது. அக்கட்சியின் பல்வேறு பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே வெறுப்பு கருத்துக்களை தெரிவிக்கும் போதெல்லாம் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று சொந்த கருத்து என்றும் விலகிக் கொள்கிறது.
ஆனால் அவ்வாறு வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளும் கட்சி பொறுப்பாளர்கள் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையோ அல்லது சட்ட நடவடிக்கையோ எடுப்பதில்லை. மிகவும் அண்மையில் நுபுர் சர்மாவின் வெறுப்பு பேச்சு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாறாக, இது போன்ற வெறுப்பு பிரச்சாரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முகமது சுபேர் ஒரு காமெடி ட்வீட் 2018ல் பகிர்ந்ததற்கு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதே போல் 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை தொடர்ந்து நீதி கேட்டு போராடிய டீஸ்டா செடல்வாட் மற்றும் அன்றைய குஜராத் அரசுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவை அனைத்தும் சில தினங்களில் நடைபெற்ற சம்பவங்களே. இதே போல் சில வாரங்கள் என எடுத்துக்கொண்டால் பல “புல்டோசர்” இடிப்புகளும் கைதுகளும் பட்டியலில் அடங்கும். சில மாதங்கள், சில ஆண்டுகள் என்று எடுத்துக்கொண்டால் பட்டியலிட முடியாத அளவுக்கு சம்பவங்கள் நீளும்.
மேலே குறிப்பிட்டது போல் இவை உணர்த்துவது ஒன்றுதான். பாஜகவை யாரும் எதற்கும் எதிர்க்க கூடாது. மீறினால் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும். பத்திரிக்கையாளர்களின் குரல்வளை நெறிபட நெறிபட ஒவ்வொருவராக அமைதி ஆவதும் பலர் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதும், அதனால் உண்மை தெரியாமல் பொதுமக்கள் பலர் வகுப்புவாதி (communal) ஆவதும் கண்கூடாக தெரிகிறது.
இந்நிலை தொடர்ந்தால் எப்போது வேண்டுமானாலும் இந்து-முஸ்லிம் கலவரம் வெடிக்கலாம் என்கிற அச்சம் பலரிடம் உள்ளது. ஆர்.எஸ்.எஸ் போன்ற பல இந்துத்வா அமைப்புகள் வன்முறை வெறியாட்டத்திற்கு ஆட்களை ஆயுத பயிற்சியுடன் தயார் படுத்தி வைத்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் தான் இது பாசிசம் என்று விசாரிக்கப்படுகிறது.
இதே போன்றதொரு நிலைக்கு தான் ஹிட்லர் காலத்து ஜெர்மனி நாஜி படையினரால் கொண்டு செல்லப்பட்டது. நாஜி கட்சி சார்பாக தொடர்ந்து யூதர்கள் மீது வெறுப்பு பிரச்சாரங்களும் பத்திரிக்கையாளர்கள் மீது கைது நடவடிக்கைகளும் கொலைகளும் நடைபெற்றது. நாஜி கட்சியின் ஒவ்வொரு பகுதியாக உருவாக்கப்பட்ட எஸ்.எஸ் என்கிற படை தினசரி யூதர்களையும் யூதர் என்று சந்தேகத்தின் பேரில் யூதர் அல்லாத ஆரிய ஜெர்மானியர்களையும் கூட வன்முறைக்கு உள்ளாக்கியது.
பொது மக்கள் மனதில் ஜெர்மனியின் அனைத்து பிரச்சனைகளுக்கும் யூதர்களே காரணம் என்றும் ஜெர்மனியை இரட்சிக்க நாஜி கட்சியின் ஹிட்லரும் பாடுபடுவதாக நம்ப வைக்கப்பட்டனர். இந்த ஒரு கருத்தை தவிர வேறு எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் மக்களுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இவ்வாரான செயல்பாடுகளால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீண்டு வர ஜெர்மனிக்கு ஒரு உலகப் போர் தேவை பட்டது.
உலகெங்கிலும் இது போன்ற பாசிச போக்கை ஜனநாயக சக்திகள் முறியடித்ததாக எந்த வரலாறும் இல்லை. ஒன்று, மக்கள் புரட்சியால் பாசிசம் முடிவுக்கு வரும். அல்லது அந்நிய நாட்டு படையெடுப்பு, உள்நாட்டு போர் போன்று ரத்தம் சிந்தி மட்டுமே முடிவுக்கு வரும். இந்நிலையில், இந்தியாவில் பல எதிர்க்கட்சிகளும் நாளுக்கு நாள் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு ஒன்றிணைவது அதிகரித்து வருகிறது.
இவ்வாறு ஒன்றிணைந்து பாஜகவை எப்படியேனும் வீழ்த்திவிட முனைகிறது. இது இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய பரிசோதனை முயற்சி(Experiment). இதில் எதிர்க்கட்சிகள் வென்றால் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் தோற்றால் உலகில் வரலாற்று பாடங்களில் உதாரணமாகவும் விளங்கும்.