பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் மகன் தலைமறைவு !
பாலியல் புகாரில் ராஜஸ்தான் அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் ஜோஷியை கைது செய்ய டெல்லி போலீஸார் ராஜஸ்தான் சென்ற நிலையில், ரோஹித் தலைமறைவாகி உள்ளார்.
டெல்லி சதர் பஜார் காவல் நிலையத்தில் 23 வயது பெண் ஒருவர் கடந்த மே 8-ம் தேதி ராஜஸ்தான் மாநில நீர்வளத்துறை அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் ஜோஷி மீது பாலியல் புகார் அளித்தார். அப்புகாரில் ரோஹித்துடன் பேஸ்புக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தனக்கு தெரியாமல் தன்னை ரோஹித் நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டியதாகவும் கருவுற்ற நிலையில், கருக்கலைப்பு மாத்திரை சாப்பிடும்படி கட்டாயப் படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். அப்பெண்ணின் புகாரின் பேரில் டெல்லி காவல் துறையினர் ரோஹித் மீது 6 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து மே 15-ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் ஜோஷியை விசாரிக்க டெல்லி காவல்துறையின் 15 பேர் கொண்ட குழு ஜெய்ப்பூர் சென்றடைந்தது. ஜெய்ப்பூரில் உள்ள அமைச்சரின் 2 வீடுகளுக்கும் சென்ரூ ஆய்வு செய்ததில் ரோஹித் அங்கு இல்லை. அவர் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, வரும் 18-ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனை அவரது வீட்டின் சுவற்றில் டெல்லி போலீஸார் ஒட்டினர்.
இது தொடர்பாக அமைச்சர் ஜோஷி கூறுகையில், ‘‘நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். டெல்லி போலீஸார் என்னிடம் வந்தால் அவர்களின் விசாரணைக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவேன்’’ என்றார்.
ஆனால், அமைச்சரின் மகனை காப்பாற்ற ராஜஸ்தான் மாநில அரசு முயற்சிப்பதாக பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா குற்றம் சாட்டியுள்ளார்.