கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு !
உள்நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தி விலை ஏற்றத்தை தடுக்க கோதுமை மற்றும் வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.
உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உக்ரைனும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் காரணமாக உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 14 லட்சம் டன்னாக அதிகரித்ததுள்ளது. ஏற்றுமதி அதிகரித்ததை அடுத்து உள்நாட்டில் விலை அதிகரிக்க தொடங்கிய உள்ளது.
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரக அறிவிக்கை
இந்நிலையில், உள்நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு உடனடி தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் இது தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டது. அதில், “கோதுமை ஏற்றுமதிக்கு உடனடி தடை அமலாகிறது. இருப்பினும், மே 13 ஆம் தேதிக்கு முன்னதாக கோதுமை ஏற்றுமதி ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், அதன்படி ஏற்றுமதிகள் அனுமதிக்கப்படும். மேலும், அண்டை நாடுகள் கோதுமை ஏற்றுமதி செய்ய கோரியிருந்தால், மத்திய அரசு அனுமதியுடன் கோதுமை ஏற்றுமதி செய்யப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் காரணமாக சர்வதேச அளவிலான கோதுமை சந்தையில் திடீரே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவும் கோதுமை சீராகக் கிடைக்காமல் சிக்கலில் உள்ளன. இந்நிலையில் உள்நாட்டில் உணவுப் பாதுகாப்பு, தேவையை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் கோதுமையின் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோல் வெங்காய விதை ஏற்றுமதிக்கும் உடனடியாக தடை கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேவேளையில் 2022-23 காலகட்டத்தில் கோதுமை ஏற்றுமதி தொடர்பாக மொராக்கோ, டுனீசியா, இந்தோனேசியா உள்ளிட்ட 8 நாடுகளுடன் ஆலோசனை நடத்த பிரதிநிதிகளை அரசு அனுப்பிவைத்துள்ளது. 2022-23 ஆண்டில் 10 மெட்ரிக் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021-22ல் ஏற்றுமதி செய்யப்பட்ட 7 மெட்ரிக் டன் கோதுமையில் 50% வங்கதேசத்துக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கோதுமைக்கு சர்வதேச கோதுமை சந்தையில் நல்ல மதிப்பு கிடைத்துள்ளது. எனவே, கோதுமை தரத்தை உறுதி செய்ய விவசாயிகள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள் தரக் கட்டுப்பட்டில் கவனம் செலுத்துமாறு விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி கழகம் அறிவுறுத்தியுள்ளது.