நாளை பிரதமரை சந்திக்கும் கர்நாடக முதல்வர்!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மத்திய அரசின் அனுமதியுடன் மேகதாது அணை கட்டப்படும் என தெரிவித்திருந்தார்.
அண்மையில், கர்நாடக மாநில உள்துறை அமைச்சரும் மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழகத்தில் குரல்கள் வலுத்து வருகின்றன. அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக மூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்திலிருந்து என்னதான் எதிர்ப்பு கிளம்பினாலும் மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தொடர்ந்து உறுதி காட்டி வருகிறது.
இதனையடுத்து, தமிழக அனைத்து கட்சி குழு நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேச உள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், மேகதாது அணை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
நாளை தமிழக அனைத்து கட்சி குழு மற்றும் எடியூரப்பா அவர்களின் சந்திப்பு முடிவடைந்த பிறகு இந்த விவகாரத்தில் அடுத்த கட்டம் என்னவென்று தெரியவரும்.