புதிய அமைச்சர்களுக்கு மோடியின் அறிவுரை

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜூலை 7 ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டு, பல புதிய அமைச்சர்களும் சேர்க்கப்பட்டனர். தற்போது, 43 உறுப்பினர்களுடன் மத்திய அமைச்சரவை உள்ளது.
இந்தப் புதிய அமைச்சர்களுடன் நேற்று (8.7.2021) பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய அமைச்சர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
அந்த ஆலோசனைக்கூட்டத்தில் மோடி, “ இந்தியாவில் கடந்த மாதங்களை விட கொரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. எனவே, கொரோனா தொடர்பாக யாரும் மனநிறைவை அடையக் கூடாது.
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம், நிலையான தடுப்பூசி மற்றும் உயர் பரிசோதனையுடன் முழு வீரியத்துடன் நடந்து வருகிறது. நாம் மக்களிடம் பயத்தைத் தூண்டக் கூடாது.
கொரோனாவை நீக்கும் செயல்களில் தான் அமைச்சர்களின் கவனம் இருக்க வேண்டும். ஊடகத்தின் கவனத்தை ஈர்க்கும் செயல்களில் அமைச்சர்கள் ஈடுபடக்கூடாது. கொரோனாவை வென்றால் தான் நாடு அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.