பத்திரிக்கையாளர்களின் குரல் வளையை நெரிக்கும் மோடி

சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் அரசியல் தலைவர்களின் பட்டியலை ஆர்எஸ்எப் என்று அழைக்கப்படும் எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டுக்கான பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. ஊடக செய்திகளுக்கு தணிக்கை முறையை ஏற்படுத்துவது, பத்திரியாளர்கள்களை சிறையில் தள்ளுவது அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவீழ்த்து விடுவது அல்லது நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்தியாளர்களின் மரணத்திற்கு காரணமாக அமைவது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இதில் 37 தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட 20 பேர் ஏற்கனவே இடம்பெற்றவர்கள். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாமு ஆகிய 2 பெண் தலைவர்கள் உட்பட 17 பேர் புதிதாக இடம் பிடித்துள்ளனர்.
மோடி பதவியேற்ற 2014 ஆம் ஆண்டு முதல் பத்திரிக்கையாளர்களின் குரல் வளையை நெரித்து வருவதாக ஆர்எஸ்எப் அமைப்பு குற்றஞ்சாட்டி வருகிறது.
மேலும், 2001 ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக மோடி பதவியேற்ற பின்பு செய்தி மற்றும் தகவல்களை கட்டுப்படுத்தும் ஆய்வுக் கூடமாக குஜராத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் இந்த அமைப்பு விமர்சனம் செய்துள்ளது.