இன்னும் எத்தனை உயிரை காவு வாங்கப் போகிறது செல்பி மோகம்?

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்த பின்பு செல்பி மோகம் அதிகரித்துள்ளது. இந்த செல்பி மோகத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம், தானூரு கிராமத்தைச் சேர்ந்த அஸ்மதா (15), இவருடைய தங்கை வைஷாலி (13), இவர்களின் உறவினர் அஞ்சலி (15) ஆகிய மூவரும் தங்கள் பாட்டி மங்கபாயுடன் விவசாயப் பணிக்குச் சென்றனர்.
விவசாய நிலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் பாட்டி மங்கபாய் தனது பேத்திகளை வீட்டிற்குப் போகச் சொல்லியுள்ளார்.
மூவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கையில், சிங்கன்காவ் ஆற்றில் இறங்கி செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, மூவரும் ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர்.
வயல் வேலையை முடித்து விட்டு திரும்பிய பாட்டி, வீட்டில் பேத்திகள் இல்லாததைக் கண்டு தேடியுள்ளார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அவர்களை ஆற்றங்கரையோரம் பார்த்ததாகச் சிலர் கூறியுள்ளனர்.
ஆனால், அங்கு சென்று பார்க்கும் போது, 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மூன்று பேரையும் மீட்டுள்ளனர்.