முஸ்லீம்களைத் தாக்குபவர்கள் இந்துக்களே அல்ல… ஆர்எஸ்எஸ் தலைவர் அதிரடி பேச்சு

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் குவாஜா இப்திகார் அகமது எழுதிய தி மீட்டிங் ஆப் மைன்ட்ஸ் எனும் நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில், ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார்.
அந்த விழாவில் மோகன் பாகவத், இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் மரபணுவும் ஒன்று தான். ஆர் எஸ் எஸ் அமைப்பு ஜனநாயகத்தைத் தான் முழுமையாக நம்புகிறது. இங்கு இந்துக்கள், முஸ்ஸில்கள் ஆதிக்கம் என்பதைவிட இந்தியர்கள் ஆதிக்கம் என்ற நிலையைத்தான் விரும்புகிறோம் என்று பேசியுள்ளார்.
மேலும், அவர் இந்தியாவில் முஸ்லீம்கள் தங்கக்கூடாது என ஒருவர் கூறினால் வெறுப்பைக் காட்டினால் அவர் கண்டிப்பாக இந்துவாக இருக்க முடியாது.
பசு புனிதமான விலங்கு தான். ஆனால், சில பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். சிலர் மீது பொய்யாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இஸ்லாம் மதம் ஆபத்தில் இருப்பதாக முஸ்லிம்கள் அச்சப்பட வேண்டாம். மக்களை ஒற்றுமைப்படுத்தி, தேசத்தைக் கட்டமைக்கவே நாங்கள் விரும்புகிறோம். மக்களை ஒன்றிணைக்கும் பணியை அரசியல் கட்சிகளிடம் விட முடியாது, அவர்களை மக்களை இணைக்கும் கருவியாக செயல்பட முடியாது, சில நேரங்களில் சிதைக்கவும் செய்யலாம்.
இந்து-முஸ்லிம் பிரச்சினைகளை தீர்ப்பது என்பது பேச்சுவார்த்தை மூலம்தான் முடியும். உங்கள் முன்னோர்களை இந்துக்கள் என அழைக்கவிரும்பாவிட்டால், இந்தியர்கள் என அழையுங்கள். ஆனால், வார்த்தைகள் மூலம் வேறுபாட்டை மறந்து, நாட்டுக்காக ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் எனப் பேசியுள்ளார்.