உத்தரகண்ட் முதலமைச்சர் மீண்டும் ராஜினாமா? புதிய முதலமைச்சர் யார்?

உத்தரகண்டில் பாஜக அரசின் ஆட்சி ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம், கட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்தார்.
இதனால், புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றார். வரும் செப்டம்பர் மாதத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் என தெரிவித்திருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக இடைத் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது.
மேலும், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், திரிவேந்திர் சிங் ராவத் ஏற்படுத்திய சில திட்டங்கள் மக்களிடம் விமர்சனத்திற்குள்ளானது.
கும்பமேளாவில் பங்கேற்றவர்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என தீரத் சிங் ராவத் தெரிவித்ததும் விமர்சனத்திற்குள்ளானது. தேர்தல் நெருங்கி வருவதால் இவர் மீதும் பாஜக தலைமை அதிருப்தியில் இருந்துள்ளது.
இதனால், கட்சி மேலிடத்தின் உத்தரவிற்கேற்ப தீரத் சிங் ராவத்தும் தற்போது பதவி விலகியுள்ளார். இதையடுத்து பாஜகவின் 57 எம்.எல்.ஏ-க்கள் கூடி புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும்பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிய முதல்வர் தேர்வு குறித்து பாஜகவின் மத்திய பார்வையாளரும், மத்திய வேளாண் துறை அமைச்சருமான நரேந்திர சிங் தோமர் எம்.எல்.ஏ-க்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
சத்பால் மகராஜ், தன் சிங் ராவத், புஷ்கர் சிங் தாமி ஆகிய மூவரில் ஒருவர் முதலமைச்சராகவும் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங்குக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.