ஒரு மாம்பழத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்த தொழிலதிபர்!

மும்பையில் அமேயா என்ற தொழிலதிபர் ஒரு மாம்பழத்திற்கு பத்தாயிரம் ரூபாய் என்ற கணக்கில் ஒரு டஜன் மாம்பழத்தை துளசி என்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி இடமிருந்து வாங்கியுள்ளார்.
அந்த தொழிலதிபர் ஏன் இப்படி செய்தார் என்று பார்த்தால் அது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
மும்பையில் துளசி என்கிற ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஆன்லைன் வகுப்பு படிப்பதற்காக மாம்பழம் விற்று பணம் சேமித்து வந்திருக்கிறார்.
சிறுமியின் இந்த செயல் குறித்து கேள்விப்பட்ட தொழிலதிபர் அமேயா அந்த சிறுமிக்கு உதவ நினைத்துள்ளார்.
இதனையடுத்து, அந்த சிறுமியிடம் நேரில் சென்று ஒரு மாம்பழத்திற்கு பத்தாயிரம் ரூபாய் என்கிற வீதம் 12 மாம்பழங்களை ரூபாய் ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். மேலும், அந்த சிறுமிக்கு 13,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட் போனையும் அவர் பரிசாக அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய துளசி, இந்த உதவியை தான் எதிர்பார்க்கவே இல்லை எனவும், இதன் மூலம் எனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி சரியாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு உதவி செய்த அந்த தொழிலதிபருக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
அந்த தொழிலதிபரின் உன்னதமான இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.