உச்சகட்டத்தில் ஆளுநர், மம்தா மோதல்

மேற்கு வங்கத்தின் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கடும் மோதம் ஏற்பட்டது. இதில், மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
இதனால், கொல்கத்தாவில் சில இடங்களில் கலவரம் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு மம்தா தான் பொறுப்பேற்க வேண்டும் என ஆளுநர் கூறினார். இதனால், மம்தாவுக்கும் ஆளுரருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என இதுவரை மூன்று முறை மம்தா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், ஜூலை 2 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் சட்டமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக மாநில அரசால் அனுப்பிவைக்கப்பட்ட ஆளுநர் உரை திருப்பியனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து ஆளுநர் தன்கர், “ அரசு எழுதிக் கொடுக்கும் அனைத்தையும் ஆளுநர் வாசிக்க முடியுமா? அரசியல் சாசனத்துக்கு எதிராக இருந்தால் என்ன செய்வது” எனக் கூறியுள்ளார்.
இதற்கு மம்தா காட்டமாக பதில் கூறியுள்ளார். அவர், “1996-ம் ஆண்டு நடந்த ஜெயின் ஹவாலா லஞ்ச ஊழல் வழக்கில் தன்கர் பெயர் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் கோர்ட்டுக்கு சென்று நிரபராதி என்று கூறி அதில் இருந்து வெளியில் வந்துவிட்டார். ஆனால் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனு இன்னும் நிலுவையில் இருக்கிறது. சொல்வதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு ஊழல்வாதி. ஏன் இது போன்ற ஊழல்வாதிகளை மத்திய அரசு ஆளுநராக அனுமதிக்கிறது.
குற்றப்பத்திரிக்கையை எடுத்து பாருங்கள். அவரது பெயர் இருக்கிறதா இல்லையா தெரிந்து கொள்வீர்கள். ஆளுநர் வடக்கு வங்கம் பகுதிக்கு சென்றது வெறும் அரசியல் நாடகம். அவர் அங்கு பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை மட்டுமே சந்தித்து பேசினார். வடக்கு வங்கத்தை தனி மாநிலமாக பிரிக்க சதி நடக்கிறது. ஆளுநரை திரும்ப பெறும்படி பல முறை கடிதம் எழுதியிருக்கிறேன். எனது கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், மேற்கு வங்கத்தில் ஆளுநருக்கும் முதலமைச்சர் மம்தாவுக்கும் இடையில் மோதம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.