பாஜகவுக்கு குவியும் நன்கொடை…276 கோடி வசூல்
அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு, தனி நபர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் நன்கொடை அளிக்கும். இந்த நன்கொடை பணங்களில் ஊழல் நடைபெறுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, இந்த நன்கொடைகளில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், தேர்தல் அறக்கட்டளைகளை அமைத்து அதன்வாயிலாக நன்கொடை வழங்கும் நடைமுறையை மத்திய நேரடி வரிகள் வாரியம் 2013 ஆம் ஆண்டு அமைத்தது.
இதில் 21 அறக்கட்டளைகள் முறையாக பதிவு செய்துள்ளன. இந்த அறக்கட்டளைகள் மூலம் கட்சிகளுக்கு நன்கொடை பணம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விபரங்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து, கட்சிகளுக்கான நன்கொடை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளனர்.
அதில், ’ கடந்த, 2019 – 20ம் ஆண்டில், தேர்தல் அறக்கட்டளைகளுக்கு, ஜே.எஸ்.டபிள்யூ., நிறுவனம், 39.10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அப்பல்லோ டயர், 30 கோடி ரூபாயும், இந்தியா புல்ஸ், 25 கோடி ரூபாயும் நிதி அளித்துள்ளன.
இவை தவிர, 18 தனி நபர்களும் நன்கொடை அளித்துள்ளனர். இதில், 276.45 கோடி ரூபாய் நன்கொடை பா.ஜ.,வுக்கு அளிக்கப்பட்டது. இது, வசூலான மொத்த நன்கொடையில், 76 சதவீதம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சிக்கு, 58 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டது. இது, மொத்த நன்கொடையில், 16 சதவீதம் ஆகும் ‘ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.