பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் பத்திரிக்கையாளரை சந்தித்த மு.க.ஸ்டாலின், டெல்லியில் உள்ள அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். தமிழ்நாடு முதலமைச்சரான பிறகு முதல்முறையாக டெல்லிக்கு வந்திருக்கிறேன். கொரோனா பெருந்தொற்று பணிகள் காரணமாக பிரதமரை முன்கூட்டி சந்திக்க இயலவில்லை. பிரதமருடன் நடந்த சந்திப்பு மகிழ்ச்சியான, மனநிறைவான சந்திப்பாக அமைந்தது. தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கியுள்ளேன். எந்த கோரிக்கைகள் தொடர்பாகவும் எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என பிரதமர் கூறியுள்ளார். 
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளேன்.

மேகதாது அணைத் திட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கேட்டுக் கொண்டேன்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தினேன்.
குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கேட்டுக் கொண்டேன்.

கூடுதல் தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என கோரியுள்ளேன்.
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரினேன்.
நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தேன்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு சலுகை வழங்க கேட்டுக்கொண்டேன்.
புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும் பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க கேட்டுக்கொண்டேன்.
சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றத்தின் போக்கை பொறுத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்.
தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்.
தலைநகரில் உள்ள தமிழ் ஊடகங்களும் தமிழ்நாட்டு மக்களுக்காக வாதாட வேண்டும்.
கச்ச தீவை மீட்க நடவடிக்கை, சென்னை மெட்ரோ 2-ஆம் வழித்தடம் தொடக்கம் ஆகியவற்றையும் கோரினேன்.
கோரிக்கைகளுக்கான காரண காரியங்களை பிரதமரிடம் சொல்லியுள்ளோம் என்றார்.

தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *