தடுப்பூசி போட்டுக் கொண்டால் மரணம் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசி போடுவது மட்டும் தான் தீர்வு என மருத்துவர்கள் எச்சரித்து அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், 18 வயதை மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனாலும், பொதுமக்களில் சிலருக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அச்சம் உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் அலர்ஜி ஏற்பட்டு இறந்து விடுவோமோ என்ற பயம் காரணமாகச் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேலும், தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டு இறந்துள்ளனர் எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து, தடுப்பூசிக்கு பிந்தைய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய சுகாதார துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் இறந்ததாகக் கூறப்படும் 31 நபர்களின் உடல்களை பரிசோதனை செய்தனர். அவர்களில், மார்ச் 8ல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட, 68 வயது நபர் ஒருவர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் ஏற்பட்ட அலர்ஜியால் இறந்துள்ளார் என தெரிவித்துள்ளது.
இதுவரை, 26 ஆயிரத்து, 200க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிக்கு பிந்தைய அலர்ஜி ஏற்பட்டதாக, மத்திய சுகாதார துறை கூறி உள்ளது. இருப்பினும் இதனால் மரணம் ஏற்படுவது மிக மிக அரிதானது என, ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.