அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நிலம் வாங்குவதில் மோசடி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நிலம் வாங்கும் பணிகள் நடந்து வருகிறது. ராமர் கோவில் கட்டுவதற்காக உலகெங்கும் உள்ள இந்தியர்கள் அளித்த நன்கொடையின் மூலம் கோவில் கட்டப்பட உள்ளது.
இதனைத்தொடரந்து, கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளை கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி நிலம் ஒன்றை வாங்கியது. இந்த நிலம் வாங்கியதில் தான் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் பவன் பாண்டே அயோத்தியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். அப்போது, “ராம ஜென்மபூமியின் நிலத்தை ஒட்டியுள்ள ஒரு நிலத்தை பூஜாரி ஹரிஷ் பதக் மற்றும் அவரது மனைவி, மார்ச் 18 ஆம் தேதி மாலையில், சுல்தான் அன்சாரி மற்றும் ரவி மோகன் ஆகிய இருவருக்கும் 2 கோடி ரூபாய்க்கு விற்றனர்.
அதே நிலத்தை சில நிமிடங்கள் கழித்து ராம ஜன்மபூமி அறக்கட்டளைக்காக 18.5 கோடி ரூபாய்க்கு சம்பத் ராய் வாங்கினார். நான் ஊழல் குற்றச்சட்டை சுமத்துகிறேன். 10 நிமிடங்களுக்குள் அந்த நிலத்தில் தங்கம் விளைந்துவிட்டதா என்ன” என்று பத்திரப்பதிவு ஆதாரத்துடன் காட்டி கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் நிலத்தை வாங்கியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த விலையில் நிலத்தின் சொந்தக்காரர்கள் 2021 மார்ச் 20 ஆம் தேதி நிலத்தை விற்று பத்திரத்தை பதிவு செய்தனர். அதன் பிறகு அறக்கட்டளையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளது.