தங்களைக் காத்த மருத்துவரின் உயிரைக் காப்பாற்றிய கிராம மக்கள்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கரஞ்சேடு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாஸ்கர் ராவ் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி பாக்யலட்சுமியும் மருத்துவராக குண்டூர் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
கொரோனா காலகட்டம் என்பதால் தம்பதியர் இருவரும் கரஞ்சேடு கிராமத்திலேயே தங்கியிருந்து கொரோனா பாதித்த கிராம மக்களுக்கு சிகிச்சையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், மே 24 ஆம் தேதி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, இருவரும் குண்டூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பாக்கியலட்சுமி தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டார். ஆனால், பாஸ்கர் ராவின் நிலைமை மோசமானது. இதனையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் முழுவதும் பாதித்து விட்டது. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் தான் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என அதற்கு 2 கோடி வரை செலவாகும் எனவும் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாக்கியலட்சுமி கணவனின் உயிரைக் காப்பாற்ற தனக்குத் தெரிந்த வழிகளில் பணத்தை ஏற்பாடு செய்துள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள், கொரோனா காலத்தில் தங்களுக்கு உதவிய மருத்துவரின் உயிரைக் காப்பாற்ற முடிவு செய்தனர்.
கிராம மக்கள் அனைவரிடமும் நிதி திரட்டி மருத்துவருக்காக 20 லட்சம் ரூபாயை பாக்கியலட்சுமியிடம் கொடுத்துள்ளனர். கிராம மக்களின் இந்த செயல் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி வெளியான நிலையில், மருத்துவரையும் கிராம மக்களின் உதவி பற்றியும் அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாஸ்கர் ராவின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என தெரிவித்துள்ளார்.