மம்தாவைச் சந்திக்கும் விவசாயிகள் சங்கத் தலைவர்! போராட்டம் தீவிரமாகுமா?

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் ஆரம்பித்து ஆறு மாதங்களைக் கடந்து விட்டது. ஆனாலும், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மேலும், மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்யும் வரை எவ்வளாவு நாட்களானாலும் போராட்டம் தொடரும் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிகைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை.
வேறு ஏதேனும் பிரச்னை குறித்து வேண்டுமானால் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகைத் இன்று மாலை 3 மணிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கவுள்ளார்.
மம்தாவுடன் அவருடன் விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் உள்ளூர் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசவுள்ளேன் என்று ராகேஷ் டிகைத் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் மூலம் விவசாயிகளின் போராட்டம் அடுத்த கட்டத்துக்குப் போகுமா என எதிர்பார்ப்பும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.