தடுப்பூசி விவகாரத்தில் ஒன்றிய அரசு பொறுப்பேற்க மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு
கொரோனா பரவலைத் தடுக்க கைவசம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். ஆனால், மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்குவதில் ஒன்றிய அரசு சரியாக செயல்படவில்லை என பல மாநிலங்களும் புகார் தெரிவித்திருந்தது.
இந்த தடுப்பூசி விவகாரத்தில் ஒன்றிய அரசை மாநிலங்கள் வலியுறுத்த வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 11 மாநில அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்திற்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், “கொரோனாவிற்கு தடுப்பூசி தான் ஒரே தீர்வு. ஒன்றிய அரசிடம் இருந்து தேவையான தடுப்பூசிகள் வராத போது மாநிலங்கள் தனியார் நிறுவனங்களிடம் நேரடியாக பெற முயற்சி செய்தது.
ஆனாலும், தனியார் நிறுவனங்கள் ஒன்றிய அரசிடம் மட்டும் தான் தர முடியும் என தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு கொடுக்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை என மாநில அரசுகள் கருதுவதாக கூறி இருப்பதோடு தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படும் கால தாமதத்திற்கு அதிக விலை கொடுக்க நேரிடும்.
எனவே, தடுப்பூசி விவகாரத்தில் ஒன்றிய அரசே முழுபொறுப்பேற்க முதலமைச்சர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்த வேண்டும். தடுப்பூசி விவகாரத்தில் மாநிலங்கள் ஒன்றுபட்டு செயல்பட்டால் முடிவுகள் அற்புதமானதாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.