அடக்கம் செய்து 15 நாட்களில் உயிருடன் திரும்பி வந்த மூதாட்டி!

ஆந்திர மாநிலம், விஜயவாடாவை அடுத்த ஜகயாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்யால கடய்யா. இவரது மனைவி பெயர் கிரிஜம்மா (75). மே 12 ஆம் தேதி கிரிஜம்மா கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் விஜயவாடாவில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது குடும்பத்தில் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரிஜம்மாவை பார்ப்பதற்காக அவரது கணவர் முத்யால கடய்யா மே 15-ந் தேதி விஜயவாடா அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு கொரோனா வார்டிற்கு சென்று தன் மனைவியைத் தேடிய கடய்யா, அவர் அங்கு இல்லாததால் அதிர்ச்சியில் மருத்துவமனை ஊழியர்களிடத்தில் கேட்டிருக்கிறார். 

அதற்கு மருத்துவமனை ஊழியர்கள் கிரிஜம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகக் கூறி மருத்துவமனை பிணவறையிலிருந்து ஒரு சடலத்தை கடய்யாவிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த சடலத்துடன் வீட்டிற்கு வந்த கடய்யா மனைவிக்கு இறுதி சடங்கு செய்துள்ளார்.

இந்நிலையில், மே 23 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கிரிஜாம்மாவின் மகன் ரமேஷ் (35)  மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார். இதனையடுத்து, இருவருக்கும் சேர்த்து கிறிஸ்துவ முறைப்படி இரங்கள் கூட்டமும் நடைபெற்றுள்ளது.

திடீரென ஜூன் 2 ஆம் தேதி கிரிஜாம்மா தெருவில் நடந்து வந்து அவரது வீட்டுத் திண்ணையில் அமர்ந்துள்ளார். அதைப் பார்த்த பொதுமக்களும் அவரது கணவரும் ஆவி தான் வந்து விட்டது என பயந்துள்ளனர். அதன் பின் தான் கிரிஜாம்மாவிடம் பேசிய பிறகு தான் மருத்துவமனை ஊழியர்கள் பிணத்தை மாற்றிக் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *