21 வயது இளைஞரின் முயற்சியால் உருவான கொரோனா இல்லாத கிராமம்

மாகாராஷ்டிராவில் உள்ள காத்னே கிராமம், 21 வயதான கிராமத் தலைவரின் முயற்சியால் கொரோனா இல்லாத கிராமமாக உருவாகியுள்ளது.
1500 பேர் வசிக்கும் அந்த கிராமத்தில் இரண்டு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனையடுத்து, பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி விளை நிலங்களில் தஞ்சம் புகுந்தனர்.
இதனால், அந்த மாநிலத்திலேயே வயது குறைந்த கிராமத் தலைவரான ருத்துராஜ் தேஷ்முக் கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”எங்கள் குழுவினருடன் சேர்ந்து ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களின் ஆக்சிஜன் அளவு, உடல் வெப்பநிலை உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணித்தோம். கிராமத்திற்கு வெளியே செல்லும் நபர்களுக்கும், உள்ளே வரும் நபர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மூன்று நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். இப்போது எங்கள் கிராமத்தில், ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.