பாபா ராம்தேவைக் கண்டித்து மருத்துவர்கள் கருப்பு தினம் அனுசரித்து போராட்டம்

அண்மையில் பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவம் குறித்து கூறியிருந்த விமர்சனம் சர்ச்சைக்குள்ளானது. அதில், அவர், “அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான அறிவியல். ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிடவும் அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர்.
முதலில் ஹைட்ராக்சிக்ளோரோக்வின் தோல்வியுற்றது. பின்னர் ரெம்டிவிசிர் தோல்வியுற்றது. அதற்குப் பின், பிளாஸ்மா தெரபி தடை செய்யப்பட்டது, ஸ்டீராய்டுகள் மற்றும் பல்வேறு மருந்துகளும் தோல்வியடைந்துவிட்டன” என்று தெரிவித்திருந்தனர்.
இதற்கு, இந்திய மருத்துவ சங்கம், ராம்தேவ் தன்னுடைய கருத்தை திரும்பப் பெறவேண்டும் என்றும், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் கடிதத்துக்கு மட்டும் பாபா ராம்தேவ் பதிலளித்திருந்தார். இதனால், மருத்துவர்களிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்காத பாபா ராம் தேவ் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காததையும் கண்டித்து, இன்று மருத்துவர்கள் கருப்பு நாளாக கடைபிடித்து போராடி வருகின்றனர்.
மேலும், இது குறித்து, “ருத்துவர்களின் இந்த போராட்டம் ஆயுர்வேதத்திற்கு எதிரானதல்ல…பாபா ராம்தேவுக்கு எதிரான போராட்டம் மட்டுமே. நாங்கள் இரவு பகலாக நோயாளிகளைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த போராட்டத்தில் நாங்கள் எங்கள் சக மருத்துவர்கள் பலரை இழந்திருக்கிறோம்.
இந்த போராட்டம் இத்தோடு முடிந்து விடப்போவதில்லை. நாங்கள் நீதிமன்றம் செல்ல வேண்டுமானாலும் தயாராக இருக்கிறோம். பாபா ராம்தேவ் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும்” என தெரிவித்துள்ளனர்.