சான்றிதழில் மட்டும் விளம்பரம் தேடும் பிரதமர்! பிரியங்கா காந்தி கண்டனம்
இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையைத் தடுக்க தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதால் இந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி குறித்த மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளை வாங்குவதில் தாமதம் செய்து விட்டு சான்றிதழில் மட்டும் மோடி தனது படத்தைப் போட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார் என பிரியங்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகின் பெரிய நாடுகள் கடந்த ஆண்டே தங்கள் மக்கள் தொகையை விட பல மடங்கு தடுப்பூசிகளை ஆர்டர் செய்தன. ஆனால் இந்திய அரசு 2021 ஜனவரியில் தான், வெறும் 1.6 கோடி தடுப்பூசிக்கு முதல் ஆர்டரை செய்தது. ஆனால், ஜனவரி முதல் மார்ச் வரையில், 6.5 கோடி தடுப்பூசி மருந்துகளை இந்தியா வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளது.
மேலும், பல நாடுகளுக்கு இலவச தடுப்பூசிகளை அரசு பரிசளித்தது. ஆனால், இந்தியாவில் 3.5 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி கிடைத்திருந்தது. கொரோனா தடுப்பூசிக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. தடுப்பூசி செலுத்தப்படுவது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஆனால், தடுப்பூசி சான்றிதழில் தனது படத்தை வைத்து பிரதமர் மோடி விளம்பரம் தேடிக் கொள்கிறார்” என பதிவிட்டுள்ளார்.