தீவிரப் புயலாக மாறும் டவ்-தே!

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டவ்-தே புயல் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. நள்ளிரவு நிலவரப்படி கோவா மாநிலத்தின் பனாஜி நகரிலிருந்து 190 கிலோமீட்டர் தென்மேற்கு திசையிலும் மும்பையில் இருந்து 550 கிலோமீட்டர் தொலைவிலும் டவ்-தே புயல் மையம் கொண்டிருந்தது.
12 மணிநேரத்திற்குள் இது, அதி தீவிர புயலாக மாறும் என கணித்துள்ள வானிலை மையம், நாளை மறுநாள் குஜராத்தின் போர்பந்தர்-நாலியா இடையே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலானது வரும் செவ்வாய்க்கிழமை குஜராத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலினால் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கக் கூடும் என தெரிகிறது.
இதனையடுத்து இந்த 5 மாநிலங்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசியப் பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு நாட்களில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் எனவும் இதனால் கேரளா, கர்நாடகாவில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.