கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்க பாஜக முயற்சிக்கிறதா? துரை முருகன் கண்டனம்
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.
இதில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. அந்த 3 நியமன எம்.எல்.ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள், இதனால், தற்போது புதுச்சேரி சட்டசபையில் பாஜகவின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது.
3 நியமன எம்.எல்.ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதால் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், “புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா.? புதுச்சேரி மக்களின் தீர்ப்பை பாஜக மாசுபடுத்த வேண்டாம்.
புதுச்சேரி பேரவைக்கு தேர்வானவர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது. ஜனநாயகத்திற்கு விரோதமான பாஜகவின் நடவடிக்கைக்கு திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.