உயிருக்கே உலை வைத்த ஃபார்வர்டு மெஜேஸ்
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தைப் பயன்படுத்தாத மக்களே இல்லை எனலாம். தொழில் நுட்பத்தின் ஆதிக்கம் அந்த அளவில் உள்ளது. ஆனால், இதுவே சில சமயங்களில் உயிரையும் பறித்து விடுகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ச் அப்பில் ஃபார்வர்டு மெஜேஸ்களும் வரும். அதை பலரும் கடந்து போய் விடுவர். ஆனால், சிலர் முயற்சித்து வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு ஆசிரியர் இப்படி ஃபார்வர்டு மெஜேஸை நம்பி உயிரையே விட்டுள்ளார்.
கர்நாடக மாநில பாஜக முன்னாள் எம்.பி.யும், வி.ஆர்.எல். போக்குவரத்து நிறுவன உரிமையாளருமான விஜய் சங்கேஸ்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில், கொரோனாவில் இருந்து குணமாக எலுமிச்சை தெரபி என்ற வீடியோ இருந்தது. ”இதை நானும் முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். மூக்கில் இரண்டு சொட்டு விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்” என்ற தலைப்புடன் பகிர்ந்திருந்தார்.
இதை நம்பிய, சிந்தானூரை சேர்ந்த ஆசிரியர் பசவராஜ் என்பவர் நேற்று முன் தினம் தனது மூக்கில் எலுமிச்சை சாறு விட்டுள்ளார். மூக்கில் எலுமிச்சைச் சாறு விட்ட சில நிமிடங்களில் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்த பசவராஜை குடும்பத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பசவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வதந்தியை நம்பி ஒரு ஆசிரியரே இப்படி செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.