உத்தரகண்ட் முதல்வர் மீண்டும் சர்ச்சைப் பேச்சு

உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்த திரேந்திர சிங் ராவத், அண்மையில் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக தீரத் சிங் ராவத் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், பதிவியேற்ற சில நாட்களிலேயே தன் சர்ச்சை பேச்சுகளால் தீரத் சிங் ராவத் பிரபலமடைந்து வருகிறார். பெண்கள் அணியும் ஜீன்ஸ் உடை பற்றிய விமர்சனம் செய்திருந்தார். அதில், பெண்களை கிழிந்த ஜீன்ஸ் ஆடைகளை அணிந்து இந்த உலகிற்கு என்ன சொல்ல வருகிறார்கள். அதைப் பார்க்கும் குழந்தைகளும் சமூகமும் அவர்களிடம் இருந்து என்ன கற்றுக் கொள்ளும் என தெரிவித்திருந்தார்.
இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், அடுத்து ஒரு சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.
அவர், “கரோனா காலத்தில் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் குறைவாக வழங்கப்பட்டதாகப் புகார் கூறுகிறார்கள். ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 5 கிலோ ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. உதாரணமாக ஒரு குடும்பத்தில் 10 குழந்தைகள் இருந்தால் 50 கிலோ ரேஷன் பொருட்கள் கிடைக்கும். 20 பேர் இருந்தால் ஒரு குவிண்டால் தானியம் கிடைக்கும். 2 குழந்தைகளுக்கு 10 கிலோ தானியங்கள்தான் கிடைக்கும்.
ஆனால் 2 குழந்தைகள் மட்டும் கொண்டவர்கள், அதிகமான ரேஷன் பொருட்கள் வாங்குவோரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். இதில் யாரைக் குறைகூறி என்ன பயன். அதிகமான ரேஷன் பொருட்கள் வேண்டுமென்றால் 20 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே” எனத் தெரிவித்துள்ளார்.