ஹிதேஷா தான் முதலில் என்னை இருமுறை தாக்கினார் – ஜொமாட்டோ ஊழியர் காமராஜ்

பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியைச் சேர்ந்தவர் ஹிதேஷா சந்திரனி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், கடந்த 9-ம் தேதி பிற்பகலில் ஜொமாட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். சுமார் 1 மணி நேரம் கழித்து உணவு கொண்டு வந்ததால் ஜொமாட்டோ பணியாளர் காமராஜ்(36) என்பவருடன் ஹிதேஷா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒருகட்டத்தில், ஜோமாடோ பணியாளரை ஹிதேஷா மரியாதை குறைவாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த காமராஜ், ஹிதேஷாவை தாக்கியதில் அவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் ஹிதேஷா புகார் அளித்தார். மேலும் தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் தான் தாக்கப்பட்டதை வீடியோ, புகைப்பட ஆதாரத்துடன் அவர் பதிவிட்டார்.

இதைப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள், ஜொமாட்டோ நிறுவனப் பணியாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, அந்த நிறுவனம், பாதிக்கப்பட்ட ஹிதேஷா சந்திரனியிடம் மன்னிப்பு கேட்டதுடன், சம்பந்தப்பட்ட பணியாளர் காமராஜை பணி இடைநீக்கமும் செய்தது.

இந்நிலையில், போலீஸார் காமராஜை நேற்று கைது செய்தனர். அப்போது போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘ஹிதேஷா சந்திரனி தரக்குறைவாக பேசியதுடன், இரு முறை தாக்கினார். அதனால் கோபத்தில் அவரை தாக்கினேன். அவரது மருத்துவ செலவுக்காக ரூ. 25ஆயிரம் கொடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து, போலீஸார் இருவர் தரப்பையும் விரிவாக விசாரிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *