மம்தா மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்டுள்ள தலைகுனியவைக்கும் தாக்குதல், இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். தாக்குதலில் ஈடுபட்டவர்களின் மீது உடனடியாக நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். காவல்துறையினரும், தேர்தல் ஆணையமும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக முதல்வர் மமதா பானர்ஜி நேற்று தெரிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிட இருக்கும் முதல்வர் மமதா பானர்ஜி நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன் பின்னர் இன்று ஒவ்வொரு கோவிலாக அவர் சுவாமி தரிசனம் செய்தார். புர்பா மெதினிபூர் எனும் பகுதியில் இன்று மாலை கோவில் ஒன்றில் தரிசனம் முடித்து திரும்பும் போது மர்ம நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாகவும் அதன் காரணமாக அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் அதிர்ச்சி தோய்ந்த முகத்துடன் முதல்வர் மமதா பானர்ஜி செய்தியாளர்களிடையே தெரிவித்தார். தாக்குதல் நடந்த சமயத்தில் தன்னருகே காவலர்கள் யாரும் இல்லை என்றும், இது ஒரு சதித் செயல் எனவும் காரில் இருந்தவாரே அவர் தெரிவித்தார்.
நேற்றிரவு நந்திகிராமில் தங்குவதாக இருந்த மமதா பானர்ஜி இந்த சம்பவத்திற்கு பிறகு கொல்கத்தாவில் சிகிச்சை பெறுவதற்காக காரில் புறப்பட்டு சென்றார். மம்தா பானர்ஜி தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய நிலையில் இது தொடர்பாக விரிவான அறிக்கை அனுப்புமாறு தலைமைச் செயலாளரை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.
மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.