இந்திய வேளாண் சட்டங்கள் பற்றி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதித்தது சரியே – சசிதரூர்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மத்திய வேளாண் திருத்தச் சட்டங்கள் பற்றி விவாதம் நடந்துள்ளது. இது சரியே என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர்,  “இந்திய நாடாளுமன்றத்தில் நாம் பாலஸ்தீன் இஸ்ரேல் சர்ச்சையப் பேசியுள்ளது. அதுபோல், வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களைப் பற்றி பேசியது இல்லையா? அதே உரிமை பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கும் உண்டு தானே.

அதேவேளையில், மத்திய அரசும் வேளாண் சட்டங்கள் குறித்தும் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறது. அதற்கு எதிர்க்கட்சியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவிப்பதும் இயல்பே. எனவே, பிரிட்டன் நாடாளுமன்றம் விவாதித்ததில் எந்தத் தவறும் இல்லை. ஜனநாயக நாடுகளில் இத்தகைய விவாதங்கள் ஏற்கக்கூடியதே” என்று கூறியுள்ளார்.

பிரிட்டன் தூதருக்கு, இந்தியா சம்மன் அனுப்பியுள்ள நிலையில் சசி தரூரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடங்கி வரும் 26-ம் தேதியுடன் 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன. இதனைக் குறிக்கும் விதமாக, அன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *