புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியா?

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாரகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருமாதம்கூட இல்லாத நிலையில், புதுச்சேரி அரசியல் கட்சிகளிடையே கூட்டணி குழப்பம் நீடித்து வருகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், ரங்கசாமி தலைமையிலான எ.ஆர்.காங்கிரசை கூட்டணிக்கு தலைமை ஏற்க வருமாறு திமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கருத்து கூறிய பாஜக, திமுகவும் காங்கிரஸ் கட்சியும் மக்களை குழப்புவதாக குற்றம் சாட்டியது. அத்துடன், ரங்கசாமி பாஜக கூட்டணிக்கு வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பாஜக கூட்டணிக்கு வரவேண்டும் என, என்.ஆர். காங்கிரசுக்கு பாஜக தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாகவும், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளை கொண்டு ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வீடியோகால் மூலம் பேசவைத்து பாஜக கூட்டணிக்கு வர வலியுறுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மக்கள் மனநிலைக்கு ஏற்ப தனித்துப் போட்டியிட ரங்கசாமி விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.