மோடியின் படத்தை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. கடந்த மாதம் 26-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஐந்து மாநிலத் தேர்தல் தேதிகளை அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும்.
ஆளும் கட்சிகள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது உள்ளிட்ட விதிகள் பொருந்தும். இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் மோடியின் புகைப்படம் விதிகளை மீறி இடம்பெறுகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தது.
கொரோனா தடுப்பூசிக்காக வழங்கப்படும் சான்றிதழில் மோடியின் படம் இடம்பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழிலில் மோடியின் படம் இடம்பெறக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.