தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம்!
மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 90 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
இதனையடுத்து, விவசாயிகள் தங்கள் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களை விவசாயிகள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபடப் போவதாக விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பரப்புரைகளை மார்ச் 12 ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து விவசாயிகள் ஆரம்பிக்க உள்ளனர்.
மேலும், இந்தப் பரப்புரைகளில் பாஜகவுக்கு எதிராக மட்டும் தான் பிரச்சாரம் செய்ய உள்ளோம். வேறு எந்த குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால், கலக்கமடைந்துள்ள பாஜக விவசாயிகளுடன் திரும்ப பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.