கூட்டணி பற்றி நேரம் வரும் போது அறிவிப்பேன் – ரங்கசாமி

புதுச்சேரியில், காங்கிரஸ் ஆட்சிக் கவிழப்பால் ஏற்பட்ட அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆன்மிக சுற்றுப்பயணமாக பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூர், சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு மார்ச் 1 அன்று சென்ற ரங்கசாமி, திட்டமிட்டபடி திருச்செந்தூர் செல்லாமல் புதுவை திரும்பினார்.
இந்நிலையில், நேற்று திலாசுப்பேட்டையில் உள்ள ரங்கசாமியின் வீட்டில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் சந்தித்துப் பேசி, பாஜக மேலிடம் சொன்ன வாக்குறுதிகளை தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, நிர்வாகிகளுடன் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, நேற்று இரவு புதுச்சேரியிலுள்ள உணவு விடுதியில் கட்சி எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பரும் அதிமுக மாநிலங்களவை எம்.பி. கோகுலகிருஷ்ணன் ஆகியோருடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்.
அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சியின் நிர்வாகியும் எம்எல்ஏவுமான ஜெயபால், “கட்சியில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை கட்சித்தலைவரான ரங்கசாமிக்கு தந்துள்ளோம்” என்று நள்ளிரவில் தெரிவித்தார். ரங்கசாமி ஏதும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், கட்சி வட்டாரங்களில், கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, “தனித்துப் போட்டியிடலாம் என்று பெரும்பான்மையோர் கருத்து தெரிவித்தோம்” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று காலை காங்கிரஸிலிருந்து விலகியதுடன், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முதல்வரின் நாடாளுமன்ற செயலாளராக இருந்த லட்சுமி நாராயணன், என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தார். அவர் ரங்கசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
அதைத்தொடர்ந்து, ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “லட்சுமி நாராயணன் கட்சியில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி. ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு, மக்களுக்கு எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அரசிடம் மக்களுக்காக குரல் தந்தவரே இணைந்திருப்பது கட்சியை வலுப்படுத்தி வெற்றி அடைய செய்யும்” என்று தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் நீடிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “கட்சி எம்எல்ஏக்களுடன்,கட்சி நிர்வாகிகளிடம் பேசி வருகிறேன். கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். நேரம் வரும் போது கூட்டணி பற்றி தெரிவிப்பேன்” என்று ரங்கசாமி தெரிவித்தார்.