பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – கார்த்தி சிதம்பரம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் புதிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்கள், மகளிருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாகவும், வரும் தேர்தலில் அதிக அளவில் சிறுபான்மையினரும் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்றவர்களில் 9 பேரில் ஒருவர் மட்டுமே பெண் என்று சுட்டிக்காட்டிய கார்த்தி சிதம்பரம், 33 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் மகளிர், தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.