ஆட்டநாயகனுக்கு பெட்ரோல் பரிசு; காங்கிரஸ் நூதன போராட்டம்
பெட்ரோல் விலை ரூ.100-ஐ ஏற்கெனவே ஓரிரு நகரங்களில் தொட்டு விட்டது. 4 மெட்ரோ நகரங்களிலும் இன்னும் கொஞ்ச நாளில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.100 என்ற இமாலய விலையை பெட்ரோல் எட்டிவிடும்.
எல்.பி.ஜி. சிலிண்டர் விலை நேற்று ரூ.25 ஏற்றப்பட்டது, இன்று ரூ.14 ஏற்றப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரிப்பினால் நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது, காய்கறிகள் உட்பட அனைத்தும் விலை எகிறிக் கொண்டு இருக்கிறது.
ஆனால் நாடு முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஆளும் பாஜக-வினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், மத்திய பிரதேசம் போபாலில் காங்கிரஸ் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராகவும், அதிகப்படியான விலை உயர்வு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் கடந்த காங்கிரஸ் கட்சி ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்தியது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனோஜ் சுக்லா இந்த போட்டியை ஏற்பாடு செய்து இருந்தார்.
ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த அந்த கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதை வென்ற சலாவுதீன் அப்பாஸி என்பவருக்கு பரிசாக 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை வென்ற சலாவுதீன் அப்பாஸி 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக வாங்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கண்டித்து, மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய இந்த நூதன எதிர்ப்பு போராட்டம் பல்வேறு தரப்பினரையும் ஈர்த்துள்ளது.