கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் மோடி!
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால் தடுப்பூசி மீதான அச்சம் காரணமாக மக்கள், தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மக்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். அவருக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது.
பின்னர் மோடி கூறுகையில், “கோவிட் 19 தொற்றுக்கு எதிரான முதல் தவணை தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நான் பெற்றுக்கொண்டேன். கரோனாவுக்கு எதிரான சர்வதேச அளவிலான போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் எவ்வளவு சீக்கிரம் நமது மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் செயல்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா தடுப்பூசியைப் பெறத் தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இத்தேசத்தை கரோனா இல்லாத தேசமாக உருவாக்குவோம்” எனப் பேசியுள்ளார்.