செங்கோட்டை சம்பவம் பாஜகவினால் நடத்தப்பட்டது – அரவிந்த் கெஜ்ரிவால்!

”சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் நடந்த ஒட்டுமொத்த சம்பவமும் பா.ஜ.,வினரால் திட்டமிடப்பட்டது” என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டில்லியின் மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகளின் நிலங்களை பறிமுதல் செய்து 3 அல்லது 4 முதலாளிகளுக்கு மத்திய அரசு கொடுக்க நினைக்கிறது. விவசாயிகள் தங்கள் சொந்த வயல்களில் தொழிலாளர்களாக மாறுவார்கள். பிரிட்டிஷார்கள் கூட நம் விவசாயிகளை இந்த அளவுக்கு ஒடுக்கவில்லை.

ஒட்டுமொத்த செங்கோட்டை சம்பவமும் பா.ஜ.,வினரால் திட்டமிடப்பட்டது. டில்லியில் உள்ள வீதிகள் எங்களுக்கு தெரியாது என்பதால், எங்களை தவறான பாதையில் வழிநடத்தினார்கள் என பலர் என்னிடம் கூறினார்கள். கையில் கொடியை ஏந்தியவர்கள் பா.ஜனதா தொண்டர்கள். நமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல. நம் விவசாயிகள் எதையும் செய்வார்கள், நாட்டிற்கு எதிராக செயல்படமாட்டார்கள்.

ஆனால், பா.ஜ., கட்சியின் மத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிராக தேச விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பொய் வழக்கு பதிவு செய்துள்ளது. பிரிட்டிஷ்காரர்களுக்கு கூட இந்த தைரியம் இல்லை. ஆனால் இவர்கள் நமது விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று அழைக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *