மேற்கு வங்கத்தில் திடீர் திருப்பம்!

மேற்கு வங்கத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 3-வது முறையாக ஆட்சியைக் பிடிக்க திரிணமூல் காங்கிரஸ் போராடி வருகிறது. முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக காய்களை நகர்த்தி வருகிறது.

மற்றொரு புறம் காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பிஹார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட முயன்று வருகிறது.

இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேசும்போது, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை பாஜகவின் பி டீம் என்றும், பணம் பெற்றுக்கொண்டு வாக்குகளைப் பிரிக்கப் பார்க்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஒவைசி பணத்தால் ஒவைசியை வாங்குவதற்கு யாரும் இல்லை, மம்தாவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் பாஜக பக்கம் போய்ச் சேரும்போது அவர் அதை நினைத்து வருத்தப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையில் மேற்குவங்க மாநிலத்தில் மிக முக்கிய முஸ்லிம் அமைப்பின் தலைவரான அப்பாஸ் சிக்திக் தான் உருவாக்கியுள்ள இந்திய மதச்சார்பற்ற முன்னணி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் கணிசமாக வசிக்கும் 30 தொகுதிகளில் போட்டியிட அப்பாஸ் சித்திக் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் ‘‘மம்தா பானர்ஜி மற்றும் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட விரும்புகிறோம். வரும் 28-ம் தேதி காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டாக நடத்தவுள்ள மாநில அரசின் அடாவடியை எதிர்த்து ‘ஜனநாயகத்தை காப்போம்’ பேரணியில் நாங்களும் பங்கேற்கிறோம்.’’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *