மீண்டும் டிராக்டர் பேரணி – ராகேஷ் திகைத்

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாய சங்கங்களின் தலைவராக இருப்பவர் ராகேஷ் திகைத். இவர், ராஜாஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில்  நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்றார்.

இதில் ராகேஷ் டிகைத், ”டெல்லி பேரணிக்கு எப்போது வேண்டுமானாலும் அழைப்பு விடுக்கப்படும். இதற்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும். இம்முறை இந்த அழைப்பு நாடாளுமன்ற முற்றுகைக்கானதாக இருக்கும். இதற்கான அறிவிப்பை நாங்கள் வெளியிடுவோம். அதன் பிறகு நீங்கள் டெல்லி நோக்கி புறப்படுங்கள். இம்முறை 4 லட்சம் டிராக்டர்களுக்கு பதிலாக 40 லட்சம் டிராக்டர்கள் டெல்லியில் இருக்க வேண்டும்.

நாடாளுமன்ற முற்றுகைக்கான தேதி, ஐக்கிய முன்னணி தலைவர்களால் முடிவு செய்யப்படும். டெல்லியில் இந்தியா கேட் அருகில் உள்ள பூங்காக்களில் உழவு செய்து பயிர்கள் வளர்க்கப்படும்.

ஜனவரி 26-ம் தேதி டிராக்டர் பேரணியின் போது விவசாயிகளை களங்கப்படுத்த சதி நடந்துள்ளது. நம் நாட்டு விவசாயிகள் தேசியக்கொடியை மிகவும் நேசிக்கின்றனர். ஆனால் அரசியல் தலைவர்களை அல்ல” என்று பேசியுள்ளார்

இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறும்போது, ”விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. வேளான் துறை நலனுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இப்போதுகூட எங்களிடம் எழுப்புவதற்கு அவர்களிடம் ஏதேனும் விஷயம் இருந்தால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்,” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *